தமிழகத்தின் புதிய முதல்வர் விஜய் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அதே வேளையில், அவரது ஆட்சியின் ஆயுட்காலம் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அளித்துள்ள பதில் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. செய்தியாளர்கள் சந்திப்பில், “தமிழகத்தில் அமைந்துள்ள இந்த புதிய கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகளை முழுமையாக நிறைவு செய்யுமா?” எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, மிகவும் கவனமாகவும் மர்மமாகவும் பதிலளித்தார் பிரேமலதா.

​”நாளை என்ன நடக்கும் என்பதை இன்று யாராலும் யூகிக்க முடியாது. அரசியலில் அடுத்தடுத்த நகர்வுகள் மற்றும் மாற்றங்கள் என்ன என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என அவர் கூறியது, தவெக அரசுக்கு அளிக்கும் ஆதரவு நிபந்தனையற்றதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. முதல்வர் விஜய்யின் முதல் கையெழுத்து மற்றும் திட்டங்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், அதே சமயம் “தமிழக உரிமைகளுக்காகவும் மக்கள் பிரச்சினைகளுக்காகவும் சட்டமன்றத்தில் தேமுதிகவின் குரல் ஓங்கி ஒலிக்கும்” என ஒரு எச்சரிக்கையையும் முன்வைத்துள்ளார்.

பிரேமலதாவின் இந்த ‘வெயிட் அண்ட் வாட்ச்’ பாலிசி, தமிழக அரசியல் களத்தில் அடுத்த அதிரடி மாற்றங்கள் நிகழுமா என்ற எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.