தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க, திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் வருகை தந்திருந்தனர். அதில் விஜய்யின் நெருங்கிய நண்பரும், அவரது கடைசி படமான ‘ஜனநாயகன்’ படத்தின் தயாரிப்பாளருமான வெங்கட் நாராயணாவும் கலந்துகொண்டார். விழாவுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விஜய் சார் ஒரு மிகவும் ஒழுக்கமான மற்றும் அர்ப்பணிப்புள்ள மனிதர். அவர் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவார். அவர் தலைமையில் தமிழ்நாடு ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும்” எனத் தெரிவித்தார்.
மேலும், ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு குறித்துப் பேசிய அவர், “இன்னும் இரண்டு வாரங்களில் படம் திரைக்கு வரும். தற்போது தணிக்கை வாரியத்துடன் (CBFC) இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சான்றிதழ் கிடைத்தவுடன் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்” என்றார். படம் இணையத்தில் கசிந்த விவகாரம் குறித்துக் கேட்டபோது, அது துரதிர்ஷ்டவசமானது என்றாலும் அதைத் தாண்டி வந்துவிட்டோம் எனப் பதிலளித்தார். “அன்று சினிமாவில் ‘ஜனநாயகன்’ ஆக இருந்தவர், இன்று தமிழ்நாட்டு மக்களின் நிஜமான ‘ஜனநாயகன்’ ஆகிவிட்டார்” என அவர் உணர்ச்சி பொங்கக் கூறியது வைரலாகி வருகிறது.
