ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரசவத்திற்குப் பிறகு தாய்மார்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஜே.கே. லோன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிங்கி மஹாவர் என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததைத் தொடர்ந்து, பலியானோரின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இதுவரை மொத்தம் 13 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன இதில் 4 பேர் உயிரிழந்த நிலையில், மற்ற 9 பெண்களுக்குத் தீவிர சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையின் அலட்சியமே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் என்று உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக, அறுவை சிகிச்சைக்குப் பிறகு சிறுநீர் வெளியேறாதது குறித்து மருத்துவர்களிடம் தெரிவித்தும், அவர்கள் அதைச் சாதாரணமாகக் கருதி கவனிக்கவில்லை என்று பிங்கியின் குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் நீலேஷ் ஜெயின் தலைமையில் 5 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்களில் ஒருவருக்கு இதயக் கோளாறு இருந்ததாகவும், மற்ற மூவர் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஜே.கே. லோன் மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 52 சிசேரியன் அறுவை சிகிச்சைகள் நடந்துள்ள நிலையில், அதில் 5 முதல் 6 பெண்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் நிலவும் சுகாதாரக் குறைபாடுகள் அல்லது நோய்த்தொற்று காரணமாக இந்த பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாமா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
