தமிழக சட்டப்பேரவையின் புதிய எதிர்க்கட்சித் தலைவராக தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க 59 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்த நிலையில், அக்கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவருடன் சட்டமன்றக் குழு துணைத் தலைவராக கே.என். நேருவும், கொறடாவாக எ.வ. வேலுவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்ததால், சட்டமன்றத்தில் கட்சியை வழிநடத்தும் முக்கியப் பொறுப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வராக சி. ஜோசப் விஜய் நேற்று (மே 10) பதவியேற்றுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் செயல்பட உள்ளார். நீண்ட காலத்திற்குப் பிறகு தமிழக அரசியலில் ஒரு புதிய அரசியல் சூழல் உருவாகியுள்ளதாகப் பார்க்கப்படுகிறது.

இன்று (மே 11) கூடவுள்ள 17-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில், உதயநிதி ஸ்டாலின் தனது எதிர்க்கட்சித் தலைவர் பணியைத் தொடங்கவுள்ளார். ஆளுங்கட்சியாகத் தமிழக வெற்றிக் கழகமும், எதிர்க்கட்சியாக தி.மு.க-வும் மோதவுள்ள இந்தச் சட்டமன்றக் கூட்டத்தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.