தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. விஜய் அவர்கள் தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள நிலையில், அவருக்குத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் நெகிழ்ச்சியான முறையில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்கவிருக்கும் எங்க வீட்டுப் பையன், தம்பி விஜய்க்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


​மேலும், “தமிழகத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் சிறந்த நிர்வாகத் திறமையுடன் செயல்பட்டு, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என கேப்டன் அவர்கள் சார்பாகவும், தேமுதிக சார்பாகவும் வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். விஜய்யின் ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உறுதுணையாக இருந்த நிலையில், தற்போது விஜய் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக உயர்ந்துள்ள தருணத்தில், கேப்டனின் குடும்பத்தில் இருந்து வந்துள்ள இந்த வாழ்த்துச் செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.