தமிழக சட்டசபைத் தேர்தலில் சிவகங்கை மாவட்டம் திருப்பாத்தூர் தொகுதியில் ஏற்பட்ட தேர்தல் முடிவுகள் தற்போது நீதிமன்றப் படியாக ஏறியுள்ளன. இத்தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாகப் போட்டியிட்ட சீனிவாச சேதுபதி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பெரியகருப்பனை விட வெறும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதாவது, சீனிவாச சேதுபதி 83,365 வாக்குகளும், பெரியகருப்பன் 83,364 வாக்குகளும் பெற்றிருந்தனர். இந்த மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தை எதிர்த்து, திமுக வேட்பாளர் பெரியகருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

​பெரியகருப்பன் தொடர்ந்துள்ள இந்த வழக்கில், சீனிவாச சேதுபதி எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்பதற்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனுவானது நாளை (மே 10) காலை 10:30 மணிக்கு நீதிபதிகள் எல். விக்டோரியா கௌரி மற்றும் என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வர உள்ளது. தவெக-வின் முதல் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்கக் காத்திருக்கும் சீனிவாச சேதுபதிக்கு, இந்த நீதிமன்ற விசாரணை ஒரு இக்கட்டான சூழலை உருவாக்கியுள்ளது. இத்தீர்ப்பு தவெக மற்றும் திமுக ஆகிய இரு தரப்பினருக்கும் அரசியல் ரீதியாக மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.