இந்தியா தனது பாதுகாப்புத் துறையில் மாபெரும் சாதனையாக, ‘MIRV’ தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட அக்னி ஏவுகணையை மே 8, 2026 அன்று ஒடிசாவின் அப்துல் கலாம் தீவிலிருந்து வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.
இந்த ‘MIRV’ (Multiple Independently Targeted Re-entry Vehicle) தொழில்நுட்பத்தின் சிறப்பு என்னவென்றால், ஒரே ஒரு ஏவுகணை மூலம் வெவ்வேறு திசைகளில் உள்ள பல இலக்குகளைத் துல்லியமாகத் தாக்க முடியும். இந்தியப் பெருங்கடல் பகுதியில் வெவ்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த இலக்குகளை இந்த ஏவுகணை வெற்றிகரமாக அழித்ததை டிஆர்டிஓ உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தச் சோதனையின் மூலம், ஒரே ஏவுகணையில் பல ஆயுதங்களைச் சுமந்து சென்று எதிரி நாடுகளின் இலக்குகளைத் தாக்கும் வல்லமையை இந்தியா மீண்டும் நிரூபித்துள்ளது.
இந்த ஏவுகணை விண்வெளிக்குச் சென்றவுடன், அதிலுள்ள போர்க்கருவிகள் தனித்தனியாகப் பிரிந்து வெவ்வேறு பாதைகளில் பயணித்து இலக்குகளைத் தாக்கும். இதனால் எதிரி நாடுகளின் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளால் இதைத் தடுப்பது மிகவும் கடினம்.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த வெற்றிக்கு டிஆர்டிஓ மற்றும் இந்திய ராணுவத்திற்குப் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியாவின் இந்த அதிரடி வளர்ச்சி, நாட்டின் பாதுகாப்புத் திறனை அதிகரிப்பதுடன், அச்சுறுத்தல்களைத் திறம்பட எதிர்கொள்ளவும் உதவும் என்று கருதப்படுகிறது.
ஒரே நேரத்தில் பல இடங்களைக் குறிவைக்கும் இந்தத் திறன், உலக அரங்கில் இந்தியாவின் ராணுவ வலிமையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.
