மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த 28 வயது ஒப்பந்ததாரர் கமல் காந்த் யாதவ், முகநூல் மூலமாகப் பழகிய மர்ம நபர்களிடம் 1.23 லட்சம் ரூபாயை இழந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் ‘லக்கி சார்லஸ்’ என்ற பெயரில் இருந்த முகநூல் கணக்கு மூலம் அவருக்கு ஒரு பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது.

அந்தப் பெண் தன்னை லண்டனைச் சேர்ந்த மருத்துவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, இந்தியா வரவிருப்பதாகவும், தன்னிடம் இருக்கும் 95,000 பிரிட்டிஷ் பவுண்டுகளை இந்திய ரூபாயாக மாற்ற உதவினால் நல்ல கமிஷன் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதை நம்பிய கமல் காந்த், அந்த மோசடி கும்பலின் வலையில் சிக்கினார். சில நாட்களுக்குப் பிறகு, மும்பை விமான நிலைய அதிகாரி பேசுவதாகக் கூறி மற்றொரு பெண் கமல் காந்தை அழைத்துள்ளார்.

வெளிநாட்டுப் பணத்தை விடுவிக்கப் பதிவுக்கட்டணம், செயலாக்கக் கட்டணம் எனப் பல காரணங்களைக் கூறி அவரிடமிருந்து சிறுகச் சிறுக 1.23 லட்சம் ரூபாயைப் பறித்துள்ளனர். மீண்டும் 70,000 ரூபாய் கேட்டபோது சந்தேகம் அடைந்த கமல் காந்த், இது குறித்து சைபர் ஹெல்ப்லைன் 1930-ல் புகார் அளித்தார்.

தற்போது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கி கணக்குகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.