சீனாவின் ஷாங்காய் நகரில், கணவர் ஒரு போட்டி நிறுவனத்தில் பணிபுரிகிறார் என்ற காரணத்திற்காக 17 ஆண்டுகள் விசுவாசமாகப் பணியாற்றிய லியு என்ற பெண் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டார். லியு தனது பதவியைப் பயன்படுத்தி நிறுவனத்தின் ரகசியத் தகவல்களைக் கணவரிடம் கசியவிடக்கூடும் என்று நிர்வாகம் குற்றம் சாட்டியது.
ஆனால், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், தனிப்பட்ட உறவுகளுக்காக ஒருவரின் வேலையைப் பறிப்பது சட்டப்படி தவறு என்றும் லியு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். கிட்டத்தட்ட 2006 முதல் பணியாற்றிய அவரை, எவ்வித ஆதாரமுமின்றி நீக்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கணவனும் மனைவியும் ஒரே துறையில் பணிபுரிவது இயல்பானது என்றும், முறையான ஒப்பந்தம் அல்லது ஆதாரம் இல்லாமல் ஒருவரைப் பணிநீக்கம் செய்ய முடியாது என்றும் தீர்ப்பளித்தது.
லியுவின் தரப்பு நியாயத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அவருக்குச் சேர வேண்டிய சம்பளம், போனஸ் மற்றும் விடுப்புத் தொகை என மொத்தம் 95 லட்சம் ரூபாய் (690,000 யுவான்) இழப்பீடாக வழங்க அந்த நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.
நிறுவனத்தின் தேவையற்ற பொறாமை மற்றும் தன்னிச்சையான நடவடிக்கை அந்த நிர்வாகத்திற்குப் பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
