அமெரிக்க வரலாற்றிலேயே முதன்முறையாக, அடையாளம் தெரியாத மர்மப் பொருட்கள் (UAP/UFO) தொடர்பான ரகசிய ஆவணங்களை பொதுமக்களின் பார்வைக்காக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசு வெளியிட்டுள்ளது.

‘PURSUE’ என்ற திட்டத்தின் கீழ், வொயிட் ஹவுஸ், நாசா மற்றும் எப்.பி.ஐ போன்ற அமைப்புகள் இணைந்து இந்த வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களை war.gov/ufo என்ற இணையதளத்தில் பதிவேற்றியுள்ளன.

பல ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்ட இந்தத் தகவல்களைப் பார்க்க இப்போது யாருடைய அனுமதியும் தேவையில்லை. ‘UAP’ என்பது விண்வெளி, கடல் மற்றும் நிலப்பரப்பில் தென்படும் விளக்க முடியாத மர்ம நிகழ்வுகளைக் குறிக்கும் அறிவியல் ரீதியான பெயராகும்.

இந்த வெளியீடு குறித்துப் பேசிய பாதுகாப்பு அதிகாரிகள், பல தசாப்தங்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்த உண்மைகளை வெளிப்படைத்தன்மையுடன் பகிர்வதே இதன் நோக்கம் என்று தெரிவித்துள்ளனர்.

நாசா மற்றும் பிற உளவு அமைப்புகள் இந்தத் தரவுகளை ஆய்வு செய்து வந்தாலும், இதில் உள்ள பல மர்மங்களுக்கு இன்னும் முழுமையான விடைகள் கிடைக்கவில்லை என்று ஒப்புக்கொண்டுள்ளனர்.

“எங்களிடம் உள்ள தகவல்களை மக்களிடம் கொடுத்துவிட்டோம், ஆனால் இதற்கான காரணங்கள் எங்களுக்கே இன்னும் புரியவில்லை” என்பதே அரசாங்கத்தின் தற்போதைய நிலையாக உள்ளது. இது உலகெங்கிலும் உள்ள ஏலியன் மற்றும் விண்வெளி ஆர்வலர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.