பீகாரின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள சந்த்பூர்-சோஹரியா ஊராட்சியில், தாரு சமூகத்தினர் தங்களது பாரம்பரிய ‘பர்ணா’ திருவிழாவை முன்னிட்டு 48 மணி நேர ‘பசுமை முடக்கத்தை’ கடைப்பிடித்துள்ளனர். இந்த காலகட்டத்தில் விவசாயப் பணிகள், கூலி வேலை, தேவையற்ற வெளிச்செலவு ஆகியவை நிறுத்தப்பட்டதுடன், வெளியூரைச் சேர்ந்தவர்கள் கிராமத்துக்குள் வருவதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
மழைக்காலத்துக்குப் பிறகு புதிய புற்கள், செடிகள் மற்றும் தாவரங்கள் வளரத் தொடங்கும் காலமாக இந்தப் பருவத்தை தாரு சமூகத்தினர் கருதுகின்றனர். அந்த புதிய வளர்ச்சிகளுக்கு மனிதர்களால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க இரண்டு நாட்களுக்கு இயற்கைக்கு ஓய்வு அளிப்பதே இந்த மரபின் நோக்கம் என தெரிவிக்கப்படுகிறது. இந்த நேரத்தில் இலை, புல் அல்லது எந்தவொரு தாவரப் பகுதியையும் பறிக்கக்கூடாது என்ற கட்டுப்பாடும் உள்ளது.
இந்த விழா வன தேவியை வழிபடுவதுடன் தொடங்குகிறது. பின்னர் உள்ளூர் மரபில் ‘பர்கானா’ என்று அழைக்கப்படும் அரச மரத்துக்கும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. 48 மணி நேரத்துக்குத் தேவையான உணவு மற்றும் கால்நடைகளுக்கான தீவனத்தை முன்கூட்டியே மக்கள் தயார் செய்து கொள்கின்றனர். கிராமத்தின் நான்கு திசைகள் மற்றும் நான்கு மூலைகளிலும் மொத்தம் எட்டு பேர் காவல் பணியில் ஈடுபட்டு, சமூக விதிமுறைகள் பின்பற்றப்படுவதை கண்காணிக்கின்றனர்.
விதிகளை மீறி தாவரங்களை சேதப்படுத்தினால் சமூக அளவில் அபராதம் விதிக்கப்படும் நடைமுறையும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 48 மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அரச மரத்துக்கு வழிபாடு நடத்தப்பட்டு, விவசாயப் பணிகள் உள்ளிட்ட இயல்பான நடவடிக்கைகள் தொடங்குகின்றன. இயற்கையைப் பாதுகாப்பதுடன், சமூக ஒற்றுமை மற்றும் பொறுப்புணர்வையும் வெளிப்படுத்தும் பாரம்பரியமாக பர்ணா திருவிழா பார்க்கப்படுகிறது.
