ரஷ்யா – உக்ரைன் போர் நான்கு ஆண்டுகளைக் கடந்து நீடித்து வரும் நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தற்போது பதுங்கு குழியில் தங்கியபடி ரகசியமாக ஆட்சி செலுத்தி வருகிறார். உக்ரைனின் ‘ஆபரேஷன் ஸ்பைடர்வெப்’ என்ற அதிரடித் திட்டம் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் குறித்த பயம் காரணமாக, அவர் மாஸ்கோவில் உள்ள தனது வீடுகளைத் தவிர்த்துவிட்டு, தெற்கு ரஷ்யாவில் உள்ள பாதுகாப்புமிக்க பதுங்கு குழிகளில் அதிக நேரத்தைச் செலவிடுகிறார்.

இதனால் அவர் பொதுமக்களைச் சந்திப்பதைக் குறைத்துக்கொண்டு தனிமையில் இருப்பதாகவும், ஆனால் அவர் வெளியில் நடமாடுவது போன்ற பழைய வீடியோக்களை அரசு ஊடகங்கள் வெளியிட்டு மக்களை நம்ப வைப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

புதினின் பாதுகாப்பு வளையம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பலப்படுத்தப்பட்டுள்ளது. அவருடன் பணியாற்றும் சமையல்காரர்கள், பாதுகாவலர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தவும், புதினின் முன்னிலையில் மொபைல் போன் அல்லது இன்டர்நெட் பயன்படுத்தவும் கடும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆட்சி கவிழ்ப்பு முயற்சி நடக்கலாம் என்ற அச்சத்தால் கிரெம்ளின் மாளிகை அதிகாரிகள் கவலையில் உள்ள சூழலில், புதின் தனது குடும்பத்தினருடன் ரகசிய இடங்களிலேயே முகாமிட்டு அங்கிருந்தே போருக்கான முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார்.