இந்திய வீடுகளில் அன்றாடம் இடம்பெறும் பருப்பு, ராஜ்மா மற்றும் சுண்டல் போன்ற உணவுகள் சத்தானவை என்றாலும், பலருக்கும் இவற்றைச் சாப்பிட்ட பிறகு வயிறு உப்பசம் மற்றும் எரிச்சல் போன்ற தொல்லைகள் ஏற்படுவதுண்டு.

இதற்காகச் சத்தான உணவுகளைத் தவிர்ப்பதை விட, சமைக்கும் முறையில் சில எளிய மாற்றங்களைச் செய்தாலே போதும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

முக்கியமாக, பருப்பு வகைகளைச் சமைப்பதற்கு முன்பு சில மணிநேரம் ஊறவைப்பது மிகவும் அவசியம்; இது செரிமானத்திற்குத் தடையாய் இருக்கும் ‘பைடிக்’ அமிலத்தை நீக்கி வயிறு உப்புவதைத் தடுக்கும்.

அதேபோல் சமைக்கும்போது பெருங்காயம், இஞ்சி, சீரகம் மற்றும் ஓமம் போன்ற செரிமானத்தைத் தூண்டும் பொருட்களைச் சேர்த்துக்கொண்டால், வாய்வுத் தொல்லை இன்றி உணவைச் செரிக்கலாம்.

ஆரம்பத்தில் செரிமானத்திற்கு எளிதான பாசிப்பருப்பு போன்றவற்றைச் சாப்பிட்டுப் பழகிவிட்டு, பிறகு மெல்ல மெல்ல ராஜ்மா போன்ற கனமான பருப்பு வகைகளுக்கு மாறுவது உங்கள் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றினால் சத்துக்களும் முழுமையாகக் கிடைக்கும், வயிறு தொடர்பான பிரச்சனைகளும் எட்டிப்பார்க்காது.