தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள த.வெ.க – காங்கிரஸ் கூட்டணியை ஆட்சி அமைக்க அழைக்காமல் காலதாமதம் செய்யும் ஆளுநரின் போக்கைக் கண்டித்து, ஆளுநர் மாளிகையை முற்றுகையிடப் போவதாகத் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாகத் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் தலைவர் மா. சின்னதம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) அதிகப்படியான தொகுதிகளில் வெற்றி பெற்று மக்களின் தெளிவான ஆதரவைப் பெற்றுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் பேரியக்கமும் த.வெ.க. தலைவர் விஜய் அவர்களுக்குத் தனது அதிகாரப்பூர்வ ஆதரவை வழங்கியுள்ளது. இதன் மூலம் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பலம் இந்தக் கூட்டணிக்குக் கிடைத்துள்ளது.
பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுள்ள ஒரு கூட்டணியை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் இதுவரை அழைக்காதது, தமிழக மக்களிடையே மிகப்பெரிய சந்தேகத்தையும் அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது. இந்த ஜனநாயக விரோத தாமதத்திற்குப் பின்னால், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் அரசியல் அழுத்தம் செயல்பட்டு வருகிறதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் வலுத்து வருகிறது. இந்தச் செயல்பாட்டைத் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது.
மக்கள் அளித்துள்ள ஜனநாயகத் தீர்ப்பை மதித்து, பெரும்பான்மை ஆதரவு கொண்ட த.வெ.க – காங்கிரஸ் கூட்டணியை உடனடியாக ஆட்சி அமைக்கத் தமிழக ஆளுநர் அழைக்க வேண்டும். இல்லையெனில், மக்களின் தீர்ப்பைப் பாதுகாக்கத் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு மிகப்பெரிய அளவில் ஜனநாயகப் போராட்டம் நடத்தப்படும் என இந்த அறிக்கையின் மூலம் எச்சரிக்கிறோம்.இவ்வாறு மா. சின்னதம்பி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
