இந்தியாவின் அரசியல் சூழலில் தற்போது மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த 4 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேச தேர்தல் முடிவுகளில் பாஜக மூன்று இடங்களிலும், தவெக மற்றும் காங்கிரஸ் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இது வெறும் தேர்தல் வெற்றி மட்டுமல்ல, பாஜகவை தீவிரமாக எதிர்த்து வந்த திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் வீழ்ச்சியாகவும் பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்தியாவில் எங்குமே கம்யூனிஸ்ட் ஆட்சி இல்லாத சூழல் உருவாகியுள்ளது. மம்தா பானர்ஜி, ஸ்டாலின், பினராயி விஜயன் போன்ற வலுவான எதிர்க்கட்சிக் குரல்கள் முடக்கப்பட்டிருப்பது, ஜனநாயகத்தில் ஒருமித்த அதிகாரம் கொண்ட சூழலை உருவாக்கியுள்ளது. ஜனநாயகத்தில் ஆளுங்கட்சிக்கு எதிராக வலுவான எதிர்க்கட்சிக் குரல் இருப்பது மிகவும் அவசியம்.

ஆனால், தற்போது பாஜக 22 மாநிலங்களில் நேரடியாகவோ அல்லது கூட்டணி மூலமாகவோ ஆட்சியில் அமர்ந்துள்ளது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் விவாதங்கள் இன்றி சட்டங்கள் நிறைவேற்றப்படும் நிலையில், மாநில அளவில் சவாலாக இருந்த முக்கிய கட்சிகளின் தோல்வி நாட்டுக்கு ஆபத்தானது என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற நோக்கில் நகரும் இந்த அரசியல் மாற்றம், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கு வழிவகுக்கும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. மக்களின் இந்த அரசியல் புரிதல் இன்மை வரும் காலங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தோன்றுகிறது.