மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகள் குறித்து அதிரடியான கருத்தை முன்வைத்துள்ள மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், இந்தத் தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்தத் தேர்தல் வென்றெடுக்கப்பட்டது அல்ல, திருடப்பட்டது” என்று மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பாஜக தனது பலத்தால் திரிணாமுல் காங்கிரஸைத் தோற்கடிக்கவில்லை என்றும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், அளவுக்கு அதிகமான மத்தியப் படைகளின் குவிப்பு மற்றும் லட்சக்கணக்கான மக்களின் ஓட்டுரிமை பறிக்கப்பட்டதுமே மம்தா பானர்ஜியின் தோல்விக்குக் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
சுமார் 13 ஆண்டுகால மம்தா பானர்ஜியின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ள நிலையில், இந்தத் தோல்வி ஒரு கட்சிக்கு ஏற்பட்ட வீழ்ச்சி அல்ல, மாறாக ஜனநாயக அமைப்புகள் மூலம் நடத்தப்பட்ட ஒரு சதி என்று சிபல் சுட்டிக்காட்டியுள்ளார். சுமார் 25 லட்சம் வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை இழந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த இக்கட்டான நேரத்தில் அனைவரும் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேற்கு வங்க அரசியலில் பாஜகவின் இந்த வெற்றி பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள சூழலில், கபில் சிபலின் இந்தக் கருத்து விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
