திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தொடர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் குவிந்து வரும் நிலையில், அங்கு குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் எல்லை மீறிச் செல்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மே தினம் மற்றும் சனி, ஞாயிறு எனத் தொடர் விடுமுறை காரணமாகக் கொடைக்கானலில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். இந்நிலையில் இன்று (மே 3) ஒரு சுற்றுலாத் தலம் அருகே பெண் ஒருவர் ஐஸ்கிரீம் சாப்பிட்டபடி நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த குரங்கு ஒன்று, யாரும் எதிர்பாராத விதமாக மின்னல் வேகத்தில் அந்தப் பெண்ணின் கையில் இருந்த ஐஸ்கிரீமைப் பறிக்க முயன்றது.

 

 

View this post on Instagram

 

A post shared by Sun News Tamil (@sunnews)

குரங்கின் திடீர் தாக்குதலால் பயந்துபோன அந்தப் பெண், தனது கையில் இருந்த ஐஸ்கிரீமைக் கீழே போட்டுவிட்டுத் தப்பி ஓடினார். உடனே அந்த ஐஸ்கிரீமை லாவகமாகத் தூக்கிக் கொண்டுச் சென்ற குரங்கு, அங்கிருந்த மக்கள் முன்னிலையிலேயே அதனை மிகவும் ரசித்து ருசி பார்த்தது.

மேலும் குரங்கின் இந்தச் சாதுர்யமான செயலை அங்கிருந்த சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதே சமயம், சுற்றுலாப் பகுதிகளில் குரங்குகள் மற்றும் விலங்குகளிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.