சென்னை திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் மாம்பழம் விற்பனை செய்து வந்த மூதாட்டியிடம், சிறுவர்கள் விளையாடும் 500 ரூபாய் ‘டம்மி’ நோட்டை கொடுத்து ஏமாற்றிய பெண் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயலட்சுமி (67), கடந்த பல ஆண்டுகளாகத் திருவொற்றியூர் பகுதியில் சாலை ஓரத்தில் பழம் வியாபாரம் செய்து வருகிறார். இவரது கணவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அண்மையில் காலமானார். தானும் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வரும் நிலையில், தனது மருத்துவச் செலவிற்காக மாம்பழம் விற்று பிழைப்பு நடத்தி வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, பழம் வாங்க வந்த பெண் ஒருவர் 500 ரூபாய் நோட்டை கொடுத்து 150 ரூபாய்க்கு மாம்பழம் வாங்கிச் சென்றுள்ளார். பின்னர் அந்த நோட்டை சரிபார்த்தபோது, அது சிறுவர்கள் விளையாடும் ‘சில்ட்ரன் பேங்க்’ டம்மி நோட்டு என்பது தெரிந்து ஜெயலட்சுமி அதிர்ச்சியடைந்து கண்ணீர் விட்டு அழுதார்.
பாட்டி அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, திருவொற்றியூர் எம்.எல்.ஏ கே.பி. சங்கரின் மகன் இளையவன் சங்கர் நேரில் சென்று பாட்டியைச் சந்தித்தார். அவருக்கு ஆறுதல் கூறியதுடன், வியாபாரத்திற்காக 5,000 ரூபாய் நிதியுதவி வழங்கினார். எளிய வியாபாரிகளை ஏமாற்றும் செயலில் யாரும் ஈடுபட வேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.
கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த திருவொற்றியூர் போலீஸார், எர்ணாவூரைச் சேர்ந்த பாக்கியலட்சுமி (35) என்பவரைக் கைது செய்தனர். விசாரணையில், “எனது 5 குழந்தைகளில் யாரோ விளையாட்டாக அந்த டம்மி நோட்டை பையில் வைத்துள்ளனர், அது தெரியாமல் பாட்டியிடம் கொடுத்துவிட்டேன்” என அவர் கூறினார். இருப்பினும், போலீஸார் தேடுவதை அறிந்ததும் அவர் இரவோடு இரவாக வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவாக முயன்றது விசாரணையில் அம்பலமானது. தற்போது அவர் எச்சரிக்கப்பட்டு போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
