குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் தான் தோல்வியடைந்த ஆத்திரத்தில், ஒட்டுமொத்த கிராமத்தின் குடிநீர் இணைப்பைத் துண்டித்த பாஜக வேட்பாளர் மற்றும் அவரது தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர். குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் ஜம்பூசர் தாலுகா பஞ்சாயத்துக்கு உட்பட்ட தேஹ்காம் தொகுதியில் பாஜக சார்பில் ஷகீல் மாலெக் போட்டியிட்டார். விறுவிறுப்பாக நடந்த இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் சொஹேல் ஷேக்கிடம், 2,100 வாக்குகள் வித்தியாசத்தில் ஷகீல் மாலெக் படுதோல்வி அடைந்தார்.

இந்தத் தோல்வியால் ஆத்திரமடைந்த ஷகீல் மற்றும் அவரது தந்தை காலிக் மாலெக் ஆகியோர், கிராம மக்கள் தனக்கு வாக்களிக்கவில்லை எனக் கூறி சுமார் 10,000 மக்கள் வசிக்கும் தேஹ்காம் கிராமத்தின் குடிநீர் விநியோகத்தை அதிரடியாகத் துண்டித்தனர். இதனால் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி முதல் கிராம மக்கள் குடிநீர் இன்றி தவித்தனர். கிராமத் தலைவர் பலமுறை கோரிக்கை விடுத்தும், தந்தை – மகன் இருவரும் இணைப்பை வழங்க மறுத்து அடாவடியில் ஈடுபட்டனர்.

குடிநீரைத் துண்டித்தது மட்டுமின்றி, கையில் வாள்களை ஏந்திக்கொண்டு கிராமத்தைச் சுற்றி வந்து மக்களை அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதை அடுத்து, போலீஸார் தலையிட்டு கடந்த வெள்ளிக்கிழமை மாலை குடிநீர் விநியோகத்தைச் சீரமைத்தனர்.

மக்களை அச்சுறுத்தியது மற்றும் குடிநீரைத் துண்டித்தது தொடர்பாகப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து காலிக் மாலெக் மற்றும் ஷகீல் மாலெக் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.மேலும்  தேர்தல் தோல்விக்காக ஒரு கிராமத்தையே பழிவாங்கிய இந்தச் சம்பவம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.