உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், குடிக்க தண்ணீர் கொண்டு வர மறுத்த 9 வயது சிறுவனை, அவனது மாமாவே துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது யகுத்கஞ்ச் கிராமத்தைச் சேர்ந்த ஜஸ்வீர் கோலா என்பவரது வீட்டில், அவரது மற்றொரு மகனுக்குப் பெயர் சூட்டும் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் கோலாவின் உறவினரான தனேஷ் யாதவ் என்பவரும் கலந்து கொண்டார்.

விழாவில் குடிபோதையில் இருந்த தனேஷ் யாதவ், ஜஸ்வீரின் 9 வயது மகன் யஷ்பாலிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கொண்டு வரும்படி கூறியுள்ளார். ஆனால் சிறுவன் யஷ்பால் தண்ணீர் கொண்டு வர மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற தனேஷ் யாதவ், தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து சிறுவனின் வயிற்றில் சுட்டுள்ளார்.

துப்பாக்கிச் சத்தம் கேட்டு ஓடி வந்த உறவினர்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவனை மீட்டு அலிகார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி நேற்றிரவு 9.30 மணியளவில் சிறுவன் உயிரிழந்தான்.

மேலும் சம்பவம் நடந்தவுடன் தப்பியோடிய மாமா தனேஷ் யாதவை பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது. தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, 12 மணி நேரத்திற்குள் அவரைப் போலீஸார் கைது செய்தனர். ஒரு சிறுவன் என்றும் பாராமல், அற்ப காரணத்திற்காகத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற இந்தக் கொடூர சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.