உத்தரப் பிரதேசத்தில் தன்னை விட்டுப் பிரிந்து சென்ற காதலியை ஆத்திரத்தில் கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு, இளைஞர் ஒருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சுபாஷ் என்ற இளைஞர், கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த ராதிகா (28) என்ற இளம்பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் நீண்ட காலமாகத் திருமணம் செய்துகொள்ளாமல் ‘லிவ்-இன்’ முறையில் ஒன்றாக வசித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு நிலவி வந்தது. இதனால் மனமுடைந்த ராதிகா, சுபாஷைப் பிரிந்து சென்றார். அத்துடன் சுபாஷ் மீது காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்.  தன்னை விட்டுப் பிரிந்து சென்றதோடு, போலீஸில் புகார் அளித்ததால் சுபாஷ் கடும் ஆத்திரமடைந்தார். சம்பவத்தன்று ராதிகாவைச் சந்தித்த சுபாஷ், அவரிடம் தகராறில் ஈடுபட்டுத் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாகக் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராதிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, தானும் தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்த சுபாஷ், அங்கிருந்து சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். மேலும்  ஒரே நேரத்தில் காதலன் மற்றும் காதலி இருவரும் உயிரிழந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.