தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை மற்றும் இளைஞர்களின் ஆர்வம் குறித்து விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தத் தேர்தல் களம் மிகவும் வித்தியாசமாக அமைந்துள்ளது. பொதுவாக அரசியலில் இருந்து தள்ளியிருக்கும் இளைஞர்களை, விஜய்யின் அரசியல் வருகை பெருமளவில் ஈர்த்துள்ளது. பிரச்சாரத்தின் போது விஜய் பின்னால் திரண்ட இளைஞர்கள் மற்றும் பெண்களின் கூட்டம் இதனை உறுதிப்படுத்துகிறது. குறிப்பாக 49 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் மத்தியில் விஜய்யின் தாக்கம் தேர்தல் முடிவுகளில் வெளிப்படையாகத் தெரியும்” என்றார்.

விஜய்யின் இந்த எழுச்சியால் எந்தக் கூட்டணிக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “நிச்சயமாக அதிமுக கூட்டணிக்கு இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாக்குகள் விஜய்யின் பக்கம் திரும்புவது அதிமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்புகளைக் கடுமையாகப் பாதிக்கும்” எனத் தெரிவித்தார்.

திமுக கூட்டணியில் உள்ள வைகோ மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் விஜய் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளதாகக் கூறியது குறித்த கேள்விக்கு, “இது மக்களின் மனமாற்றம் அல்ல. கள யதார்த்தத்தை இப்போதுதான் மற்றவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இளைஞர்களின் இந்த எழுச்சி அரசியலில் ஒரு புதிய மாற்றத்திற்கான தொடக்கம் என்று மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டார். மேலும் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக  உள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி-யின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.