அமெரிக்காவில் உயர்கல்வி முடித்த தெலுங்கானாவைச் சேர்ந்த 26 வயது இளைஞர் சந்து, வேலை கிடைக்காத மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பை முடித்திருந்தார். ஆனால், அமெரிக்காவின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் விசா விதிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால், படிப்பு முடித்த புதிய மாணவர்களுக்கு வேலை கிடைப்பதில் கடும் சிக்கல் நிலவுகிறது.
இதனால் தீவிரமாக வேலை தேடியும் பலன் கிடைக்காததால் சந்து மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார் தொடர்ந்து வேலை கிடைக்காததால் தனது அன்றாடச் செலவுகளுக்கு மீண்டும் பெற்றோரைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதும், எதிர்காலம் குறித்த பயமும் அவரை நிலைகுலையச் செய்துள்ளன.
இந்த நிதி நெருக்கடி மற்றும் மன உளைச்சல் காரணமாக, கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி அவர் தனது அறையில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். தற்போது அங்குள்ள தெலுங்கு அமைப்புகளின் உதவியுடன் அவரது உடலை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இச்சம்பவம் வெளிநாட்டில் படிக்கும் இந்திய மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
