இஸ்ரேலியப் படைகள் பாலஸ்தீனியர்களுக்கு எதிராகப் புரியும் பாலியல் மற்றும் பாலின வன்முறைகள் அவர்களை அச்சுறுத்தி, அடிபணிய வைக்கும் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழு கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளது. சோதனச் சாவடிகள், சிறைச்சாலைகள் மற்றும் வீடுகளில் நடத்தப்படும் சோதனைகளின் போது நிகழ்த்தப்படும் இத்தகைய வன்முறைகள், பாலஸ்தீனியர்களிடையே அவமானத்தையும் சமூகச் சிதைவையும் ஏற்படுத்தி, அவர்களைத் தங்கள் நிலங்களை விட்டு வெளியேற்றத் தூண்டுகின்றன.

ராணுவ மற்றும் அரசியல் லாபங்களுக்காக மக்களின் உயிருக்கு முக்கியத்துவம் அளிக்காமல், இத்தகைய செயல்கள் மூலமாக மறைமுகமாக இன அழிப்பு நடவடிக்கைகளில் இஸ்ரேல் ஈடுபடுவதாக நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக காசாவில் உள்ள மகப்பேறு மற்றும் பாலியல் சுகாதார மையங்களை இஸ்ரேல் திட்டமிட்டு அழித்துள்ளதால், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிறுமிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது பாலஸ்தீனியர்களின் எதிர்கால சந்ததியினரைக் குறிவைக்கும் ஒரு நீண்ட காலத் திட்டமாகும் என்று குறிப்பிடும் ஐநா நிபுணர்கள், சர்வதேச சட்டங்களை மதிக்காமல் இஸ்ரேல் செயல்படுவது வன்முறைச் சுழற்சியை மேலும் அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளனர். எனவே, பாலஸ்தீனியர்களுக்கு எதிரான அனைத்து வகையான பாலியல் வன்முறைகளையும் இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், இக்குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.