மெக்காவிற்கு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பயணிகளுக்கு தங்கும் விடுதிகளில் முறையான வசதிகள் செய்து தரப்படவில்லை என ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோவையும் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  எக்ஸ் (X) தளத்தில் சஞ்சய் சிங் பகிர்ந்துள்ள வீடியோவில், மெக்காவின் அஜிஸியா பகுதியில் உள்ள ‘ஆசாப் அல் குரைஷி’ விடுதியின் அவல நிலை அம்பலமாகியுள்ளது.

ஒவ்வொரு நபரிடமும் சுமார் ரூ. 4 லட்சம் வரை வசூலித்த பின்னரும், ஒரு சிறிய அறையில் 16 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  16 பேருக்கும் சேர்த்து ஒரே ஒரு கழிவறை மட்டுமே உள்ளது. அதுவும் உடைந்து, கழிவுநீர் வெளியேற முடியாமல் அறைக்குள்ளேயே தேங்கிக் கிடக்கிறது. விடுதியில் உள்ள மின் தூக்கி (Lift) பழுதடைந்துள்ளதால் முதியவர்கள் மற்றும் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த அவல நிலை சகித்துக்கொள்ள முடியாதது. ஹஜ் கமிட்டி உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சஞ்சய் சிங் வலியுறுத்தியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவியதை அடுத்து, சவுதி அரேபியாவில் உள்ள இந்தியத் தூதரகம் இது குறித்து உடனடியாகக் கவனம் செலுத்தியது. இந்திய ஹஜ் யாத்ரீகர்கள் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு ‘அவசர நடவடிக்கை’ எடுக்குமாறு தூதரகம் உத்தரவிட்டது. இது குறித்து இந்திய ஹஜ் யாத்ரீகர்கள் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிலில், சம்பந்தப்பட்ட கிளை அதிகாரிகள் மற்றும் கட்டிட நலக் குழுவினர் அந்த விடுதிக்குச் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். பயணிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் உடனடியாகச் செய்து தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஹஜ் பயணிகளுக்கான வசதிகள் குறித்து எழுப்பப்படும் புகார்களை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு மறுத்துள்ளார். ஹஜ் செயல்பாடுகள் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், விடுதி ஊழியர்களுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரவி வருகின்றன.