குருகிராமத்தில் போக்குவரத்து போலீசார் நடத்திய சோதனையில், சுமார் 1.05 லட்சம் ரூபாய் அபராதம் நிலுவையில் இருந்த ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கின் உரிமையாளர், காப்பீடு இல்லாமை மற்றும் முறையான பதிவு எண் பலகை இல்லாதது என மொத்தம் 26 முறை போக்குவரத்து விதிகளை மீறியுள்ளார்.
சிசிடிவி கேமராக்கள் மற்றும் நேரடி சோதனையின் மூலம் இந்த விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. விதிமுறைப்படி அபராதம் விதிக்கப்பட்டு 90 நாட்களுக்கு மேல் ஆகியும் தொகையைச் செலுத்தாததால், மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அந்த பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நிலுவையில் உள்ள ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் அபராதத்தையும் முழுமையாகச் செலுத்தினால் மட்டுமே வாகனம் திரும்ப ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் குருகிராமில் இதுபோன்ற நான்காவது பறிமுதல் நடவடிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.
