காதல் தோல்வியால் வாலிபர் ஒருவர் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பயணம் செய்து, காதலியின் கிராமத்திற்கே வந்து மின்சாரக் கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பீகார் மாநிலம் ரோதாஸ் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த பிரசாந்த் ஜெயின் என்ற வாலிபருக்கும், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் இடையே நீண்ட நாட்களாகத் தொடர்பு இருந்துள்ளது. ஆனால், கடந்த சில நாட்களாக அந்தப் பெண் பிரசாந்துடன் பேசுவதைத் தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.

காதலி தன்னைத் தவிர்ப்பதால் மனமுடைந்த பிரசாந்த், அவரை நேரில் சந்தித்து சமாதானம் செய்ய இந்தூரிலிருந்து கிளம்பி நேராக பீகாருக்கு வந்துள்ளார். கிராமத்திற்கு வந்து கெஞ்சிய போதிலும், அந்த இளம்பெண் பிரசாந்தைச் சந்திக்கவும் பேசவும் மறுத்துவிட்டார். காதலி தன்னை முழுமையாகப் புறக்கணித்ததால் ஆத்திரமடைந்த பிரசாந்த், ஊர் மக்கள் முன்னிலையிலேயே மின்சாரக் கம்பத்தின் மீது ஏறினார். தான் அணிந்திருந்த பெல்ட்டை கழற்றி கழுத்தில் மாட்டி தற்கொலை செய்யப் போவதாக மிரட்டினார்.

பிரசாந்த் அணிந்திருந்த டீ-சர்ட்டில் காதலியின் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்தது. மேலும், தனது கையில் காதலியின் பெயரைப் பச்சை (Tattoo) குத்தியிருந்தார். ராம மக்கள் நீண்ட நேரம் போராடி பிரசாந்தை மின் கம்பத்திலிருந்து பத்திரமாகத் தரையிறக்கினர். உடனடியாக அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து மீண்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் காதல் விவகாரத்தில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் வாலிபர் செய்த இந்தச் செயல், அந்தப் பகுதி முழுவதும் காட்டுத்தீயாகப் பரவியுள்ளது.