தலைநகர் டெல்லி காவல்துறையில் பணியாற்றும் காவலர் ஒருவரே 50 லட்சம் ரூபாய் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், டெல்லி காவல்துறையின் நற்பெயருக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கைதான காவலர் மீது ஏற்கனவே பல கிரிமினல் வழக்குகள் இருந்தும் அவர் பணியில் நீடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி காவல்துறையின்  காவலராகப் பணியாற்றி வந்தவர் சமய சிங் மீனா. இவர் ஒரு “கிரிமினல்” பின்னணி கொண்டவர் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இவர் ஏற்கனவே 25 லட்சம் ரூபாய் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டவர். இவர் மீது சாராய் ரோஹில்லா மற்றும் சாந்தினி மஹால் காவல் நிலையங்களில் மொத்தம் 3 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இத்தனை வழக்குகளில் சிக்கிய பின்னரும், இவர் எப்படி காவல்துறையில் தொடர்ந்து பணியில் நீடித்தார்? என்பது துறை ரீதியான விசாரணையில் பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.

கடந்த மார்ச் 31, 2026 அன்று மாலை 5:45 மணியளவில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ராணா மகிபால் சிங் மற்றும் அவரது நண்பர் மோகன் லால் ஆகியோர்  வேலையை முடித்துவிட்டு, பல லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்துடன் திரும்பிக் கொண்டிருந்தனர். ஆசாத் மார்க்கெட் ரயில்வே சுரங்கப்பாதை அருகே அவர்கள் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவர்களை மறித்து, 50 லட்சம் ரூபாய் அடங்கிய பையைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார், கொள்ளையர்களைத் தேடி வந்தனர். இதில் தொடர்புடைய மற்றவர்கள் ஏற்கனவே பிடிபட்ட நிலையில், முக்கியக் குற்றவாளியான காவலர் சமய சிங் மீனா தலைமறைவாக இருந்தார். தொழில்நுட்ப உதவியுடன் அவர் ராஜஸ்தானில் பதுங்கியிருப்பதை அறிந்த தனிப்படை போலீஸார், அங்கு சென்று அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.

மேலும் சமீபத்தில் டெல்லி சிறப்புப் பிரிவு  தலைமைக் காவலர் ஒருவர் தொழிலாளியைச் சுட்டுக் கொன்ற சம்பவம் அடங்குவதற்குள், தற்போது ஒரு காவலரே கொள்ளை வழக்கில் சிக்கியுள்ளது டெல்லி காவல்துறையின் உள்நிலை விசாரணைக் குழுவின் மெத்தனப் போக்கையே காட்டுகிறது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.