மும்பை பாந்த்ரா பகுதியில் போலி ஆப்பிள் தயாரிப்புகளை விற்க முயன்ற கும்பல் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி மதியம் 3:30 மணியளவில், கார்ட்டர் சாலை அருகே தனது காரை நிறுத்திவிட்டு அவசரமாக அலைபேசியில் பேசிக்கொண்டிருந்த ஒரு நபரை, இருவர் அணுகியுள்ளனர்.
மேலும் அவர்கள் அவரிடம் ஆப்பிள் ஏர்பாட்ஸ் சாதனங்களை விற்க முயன்றனர். அவர் அவற்றை வாங்க மறுத்த பின்பும், அந்த நபர்கள் காரை விட்டு நகர மறுத்து, தொடர்ந்து கட்டாயப்படுத்தியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அந்த நபர் தனது அலைபேசியில் அவர்களைப் படம் பிடிக்கத் தொடங்கியதும், அவர்கள் உடனடியாகத் தப்பியோடினர்.
இந்தச் சம்பவம் குறித்து ‘பாந்த்ரா பஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோவில், அந்த நபர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் பதிவு எண் MH 12 RD 4900 தெளிவாகப் பதிவாகியுள்ளது. மும்பை காவல்துறையினர் இந்த விவகாரத்தைக் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் பாந்த்ரா பேண்ட்ஸ்டாண்ட் மற்றும் கார்ட்டர் சாலை போன்ற இடங்களில், இது போன்ற போலிப் பொருட்களைக் காட்டி பொதுமக்களை ஏமாற்றும் மோசடிகள் அதிகரித்து வருவதால், மக்கள் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
