குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த ஏற்றுமதி-இறக்குமதி தொழிலதிபர் ஒருவருக்கு, திடீரென வங்கி தொடர்பான ஓடிபி எண்கள் வராதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் அளித்த புகாரைத் தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில், அதிரவைக்கும் உண்மைகள் வெளிவந்துள்ளன.

நவீன தொழில்நுட்பமான ‘கூகுள் ஜெமினி ஏஐ’ மூலம் தொழிலதிபரின் முகத்தைப் போலவே ‘டீப் ஃபேக்’ வீடியோக்களை உருவாக்கி, அதன் மூலம் ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பை இந்த மோசடிக் கும்பல் ஏமாற்றியுள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஓடிபி இல்லாமலேயே அவரது ஆதார் கார்டில் இணைக்கப்பட்டிருந்த மொபைல் எண்ணை மாற்றியுள்ளனர்.

இதன் மூலம் அவரது பெயரில் புதிய வங்கிக் கணக்குகளைத் தொடங்கி, ரூ.25,000 கடனும் பெற்றுள்ளனர். மேலும், அவரது ‘டிஜி லாக்கர்’ கணக்கை ஊடுருவி முக்கியமான ஆவணங்களைத் திருடவும் முயற்சி செய்துள்ளனர். இந்த வழக்கில் பொதுச் சேவை மையத்தில் பணியாற்றிய ஊழியர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏஐ தொழில்நுட்பம் மூலம் வங்கித் துறைக்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் எச்சரித்திருந்த நிலையில், இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.