அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனநிலை குறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்திலேயே கேள்வி எழுப்பப்பட்டிருப்பது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹவுஸ் ஆர்ம்ட் சர்வீசஸ் கமிட்டி கூட்டத்தின் போது, டெமாக்ரடிக் கட்சி உறுப்பினர் சாரா ஜேக்கப்ஸ், “டிரம்ப் நாட்டின் கமாண்டர்-இன்-சீப் பதவியில் இருக்க மனதளவில் தகுதியானவரா?” என பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்சேத்திடம் நேரடியாகக் கேள்வி எழுப்பினார்.
டிரம்பின் வினோதமான ட்வீட்கள் மற்றும் தன்னைத்தானே இயேசு கிறிஸ்துவைப் போல சித்தரிக்கும் AI புகைப்படங்களைப் பகிர்வதை சுட்டிக்காட்டிய சாரா ஜேக்கப்ஸ், டிரம்பின் தற்போதைய செயல்பாடுகள் கவலையளிப்பதாகக் குறிப்பிட்டார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்சேத், இது அதிபரை அவமானப்படுத்தும் செயல் என்றும், கடந்த நான்கு ஆண்டுகளாக ஜோ பைடனிடம் இதே கேள்வியை நீங்கள் கேட்டீர்களா? என்றும் ஆவேசமாகப் பதிலடி கொடுத்தார்.
ஈரான் மீதான போர் மற்றும் உலகளாவிய பதற்றங்களுக்கு மத்தியில், டிரம்பின் மனநிலை குறித்து அமெரிக்காவிற்குள்ளேயே விவாதம் கிளம்பியுள்ளது உலக நாடுகளை உற்றுநோக்க வைத்துள்ளது.
