அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் இடையிலான கசப்பான சம்பவங்கள் மீண்டும் உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது.

சமீபத்தில் பிரிட்டிஷ் அரச குடும்பத்தினரை வரவேற்கச் சென்ற டிரம்ப், பொது இடத்திலேயே மெலனியாவை மிகவும் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கினார். போட்டோஷூட் எடுக்கும்போது டிரம்ப் கையைப் பிடிக்க முயல, மெலனியா அதை சற்றும் யோசிக்காமல் சட்டென்று தட்டிவிட்டார்.

இருந்தபோதும் டிரம்ப் மீண்டும் மீண்டும் மெலனியாவின் முதுகில் அநாகரீகமாக கை வைத்தது அங்கிருந்தவர்களை முகம் சுளிக்க வைத்தது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் இது ஒரு சாதாரண ‘தர்மசங்கடமான நிமிடம்’ என்று கடந்து போகப்படலாம். ஆனால், இந்தியாவில் ஒரு கணவர் தன் மனைவியிடம் இப்படி பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொண்டால் சிறை தண்டனை உறுதி என்கிறது சட்டம்.

குறிப்பாக, 1988-ல் நடந்த ‘ரூபன் தியோல் பஜாஜ் Vs கே.பி.எஸ் கில்’ வழக்கில், ஒரு பெண்ணின் கண்ணியத்துக்குக் குறைவு ஏற்படுத்தியதற்காக ஐபிஎஸ் அதிகாரி தண்டிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டும் சட்ட வல்லுநர்கள், பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்படி பெண்களை பொது இடத்தில் அசிங்கப்படுத்துவது அல்லது கட்டாயப்படுத்தி தொடுவது தண்டனைக்குரிய குற்றம் என்று எச்சரிக்கின்றனர்.

கணவராகவே இருந்தாலும் மனைவியின் விருப்பமின்றி பொதுவெளியில் இப்படிச் செய்வது மன ரீதியான சித்ரவதை (498A) மற்றும் கண்ணியக் குறைவு (509) ஆகிய பிரிவுகளின் கீழ் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.