ஈரோடு மாவட்டம் கோபி அருகே மாயமான ஜவுளி நிறுவன ஊழியர் புஷ்பராணி (43), தர்மபுரி மாவட்டம் தொப்பையாறு பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இந்தத் திட்டமிட்ட கொலை தொடர்பாக அவரது கள்ளக்காதலன் மகேந்திரன் மற்றும் அவரது உறவினர் சதீஷ் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கோபியைச் சேர்ந்த மறைந்த வடிவேலின் மனைவி புஷ்பராணி. இவர் தனியார் ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 25-ஆம் தேதி வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் புகாரின் பேரில் கோபி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்த நிலையில், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே தொப்பையாறு பகுதியில் ஒரு பெண் பிணமாகக் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. விசாரணையில் அது மாயமான புஷ்பராணி என்பதும், அவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் உறுதியானது. புஷ்பராணியின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தபோது, மகேந்திரன் (32) என்பவருடன் அவர் அடிக்கடி பேசியது தெரியவந்தது. அவரிடம் போலீஸார் நடத்திய அதிரடி விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
ஜவுளி நிறுவனத்தில் வேலை பார்த்தபோது மகேந்திரனுக்கும் புஷ்பராணிக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளாகப் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. புஷ்பராணி அடிக்கடி மகேந்திரனைத் தனிமையில் சந்திக்க வருமாறு வற்புறுத்தியுள்ளார். மகேந்திரன் மறுக்கவே, “உன் மனைவியிடம் நமது உறவைப் பற்றி கூறிவிடுவேன்” என புஷ்பராணி மிரட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மகேந்திரன், தனது அக்கா கணவர் சதீஷுடன் (35) சேர்ந்து புஷ்பராணியைக் கொல்லத் திட்டமிட்டார். உல்லாசமாக இருக்கலாம் என ஆசை வார்த்தை கூறி, கடந்த 25-ஆம் தேதி புஷ்பராணியைக் காரில் ஒகேனக்கல் அழைத்துச் சென்றுள்ளனர். சேலம் மாவட்டம் பூலாம்பட்டி வனப்பகுதியில் வைத்து, “என்னை மறந்துவிடு” என மகேந்திரன் கூறியுள்ளார். அதற்கு அவர் மறுக்கவே, தாங்கள் மறைத்து வைத்திருந்த கட்டுக்கம்பியால் புஷ்பராணியின் கழுத்தை இருவரும் சேர்ந்து இறுக்கிக் கொலை செய்துள்ளனர். பின்னர் கொலையை மறைக்க, சடலத்தைத் வீசிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். தற்போது மகேந்திரன் மற்றும் சதீஷ் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
