மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஜோதி சிவாஜி என்ற 50 வயது பெண் தொழிலாளி லிப்ட்டில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அறுவை சிகிச்சை பிரிவில் ஒப்பந்தப் பணியாளராக வேலை செய்து வந்த அவர், மருத்துவ உபகரணங்களைக் கொண்டு செல்லும் சரக்கு லிப்ட்டிற்காகக் காத்திருந்தார்.

அப்போது லிப்ட் எங்கே இருக்கிறது என்று குனிந்து பார்த்தபோது, மேலிருந்து வந்த லிப்ட் எதிர்பாராத விதமாக அவரது தலையில் மோதி சிக்கிக் கொண்டது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள், சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாகப் போராடி அவரை மீட்டனர்.

உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், அவரது நரம்பு மற்றும் தண்டுவடம் பலத்த காயமடைந்ததால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த கோர விபத்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி பார்ப்பவர்களை உறைய வைத்துள்ளது.