சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், காதலுக்கு வயது, உறவு என்ற எல்லைகள் கடந்து பல விசித்திரமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில், இரு குழந்தைகளுக்குத் தாயான பெண் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் காதலனுடன் தோட்டத்தில் உல்லாசமாக இருந்தபோது சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைஷாலி மாவட்டத்தை சேர்ந்தவர் குஷி குமாரி. இவருக்கும் ராஜீவ் பாஸ்வான் என்பவருக்கும் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு சிறிய குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஓராண்டிற்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் ‘பரதேசி குமார்’ என்ற இளைஞருடன் குஷி குமாரிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. கணவன், குழந்தைகளை மறந்து குஷி அந்த இளைஞருடன் தீவிர காதலில் இருந்து வந்துள்ளார்.

புதன்கிழமை மாலை, குஷியும் அவரது காதலன் பரதேசியும் பாதேபூர் பகுதியில் உள்ள ஒரு மாந்தோப்பில் ரகசியமாக சந்தித்துக் கொண்டனர். அப்போது அவர்கள் இருவரும் அத்துமீறிய நிலையில் இருந்ததைக் கண்ட கிராம மக்கள், அவர்களை கையும் களவுமாகப் பிடித்தனர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது. பெரும் கூட்டம் கூடியதால் அங்கு  பரபரப்பு நிலவியது.

இந்த விவகாரத்தை காவல்துறைக்கு கொண்டு செல்லவோ அல்லது வாக்குவாதத்தில் ஈடுபடவோ விரும்பாத கிராம மக்கள், ஒரு விசித்திரமான முடிவை எடுத்தனர். பிடிபட்ட காதல் ஜோடியை அங்கிருந்த கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு கிராம மக்கள் முன்னிலையிலேயே அந்த பெண்ணிற்கும், அவரது காதலனுக்கும் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குஷியின் கணவர் ராஜீவ், தனது மனைவியின் செயலால் கடும் அதிர்ச்சியடைந்தார். அவர் கூறுகையில், “என் மனைவிக்கு மற்றொரு ஆணுடன் வாழவே விருப்பம் என்றால், அவரே இவரைப் பார்த்துக் கொள்ளத் தயார் என்றால், இனி எனக்கும் அவருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” என உறுதியாகத் தெரிவித்தார்.

தனது இரண்டு பச்சிளம் குழந்தைகளைப் பற்றியும் கவலைப்படாமல், குஷி தனது காதலனுடன் செல்ல முடிவு செய்துள்ளார். இந்த வினோத காதல் மற்றும் திருமணச் சம்பவம் தற்போது பீகார் முழுவதும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.