உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில், பலத்த காற்றின் காரணமாகப் பிரம்மாண்ட மரம் ஒன்று வேரோடு சாய்ந்த நிலையில், அங்கிருந்த பெண்மணியும் அவரது எருமை மாடும் நூலிழையில் உயிர் தப்பிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பிரதாப்கர் பகுதியில் கடந்த சில தினங்களாகச் சூறைக்காற்றுடன் கூடிய வானிலை நிலவி வருகிறது. சம்பவத்தன்று, அப்பகுதியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், பலத்த காற்று வீசத் தொடங்கியதைக் கண்டு மரத்தடியில் கட்டப்பட்டிருந்த தனது எருமை மாட்டை அவிழ்த்து அப்புறப்படுத்த முயன்றார்.

அவர் மாட்டை அவிழ்த்துக்கொண்டிருந்த அந்த சில நொடிகளில், காற்றின் வேகம் தாளாமல் அந்தப் பெரிய மரம் திடீரென வேரோடு சாய்ந்தது. மரம் விழப்போவதை உணர்ந்த அந்தப் பெண், மின்னல் வேகத்தில் செயல்பட்டு மாட்டை இழுத்துக்கொண்டு அங்கிருந்து  ஓடினார். மரம் கீழே விழுந்த சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் அலறியபடி ஓடி வந்தனர். மரம் விழுந்த வேகத்தில் அங்கிருந்த தூசிகள் கிளம்ப, அப்பகுதியே பரபரப்பானது. எனினும், அந்தப் பெண்மணியின் சமயோசித புத்தியால் அவரும், அந்த வாயில்லா ஜீவனும் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினர்.

இந்தத் திகிலூட்டும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தன் உயிரையும் பொருட்படுத்தாமல், ஆபத்தான சூழலில் மாட்டைப் பாதுகாக்க அந்தப் பெண் காட்டிய துணிச்சல் வியக்கத்தக்கது என்று சமூக வலைதளப் பயனாளர்கள் பலரும் அந்தப் பெண்ணைப் பாராட்டி வருகின்றனர். மேலும் மரம் விழுந்த அதிர்ச்சியிலிருந்து மீண்ட அண்டை வீட்டார், உடனடியாக அப்பெண்ணிற்கு உதவி செய்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.