மத்தியப் பிரதேச மாநிலம் கட்னி மாவட்டத்தில் மனிதாபிமானமற்ற ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சாலை விபத்தில் காயமடைந்த ஒருவரை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது ஆம்புலன்ஸின் உட்பகுதியில் ரத்தம் சிந்தியதால், காயமடைந்த அந்த நபரின் மனைவியைக் கொண்டே அந்த ரத்தக் கறைகளைச் சுத்தம் செய்ய ஊழியர்கள் கட்டாயப்படுத்தியுள்ளனர். தனது கணவரின் உயிருக்குப் போராடும் நிலையில், வேறு வழியின்றி அந்தப் பெண் ஆம்புலன்ஸைத் துடைப்பத்தைக் கொண்டு சுத்தம் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

​இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியதை அடுத்து, அரசு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டனர். மனிதாபிமானமின்றி நடந்துகொண்ட அந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் அவசர மருத்துவ உதவியாளர் ஆகிய இருவரையும் உடனடியாகப் பணிநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இக்கட்டான சூழலில் இருந்த ஒரு பெண்ணை இவ்வாறு வேலை வாங்க வைத்தது மருத்துவத் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.