“இவரோட என்னால வாழ முடியாதுங்க.. என் காதலனோட சேர்த்து வைக்கலைனா செத்துடுவேன்!” என்று உத்திரப் பிரதேசத்தில் புதுப்பெண் ஒருவர் விடியற்காலையில் மாமியார் வீட்டிலிருந்து தப்பியோடி தன் காதலன் வீட்டில் தற்கொலை மிரட்டல் விடுத்த அதிரடிச் சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது.

உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் வாலிபருக்கும் கடந்த 8 நாட்களுக்கு முன்புதான் கோலாகலமாகத் திருமணம் நடந்துள்ளது. ஆனால், திருமணத்தன்றே மணமகன் ஆண்மையற்றவர் எனக் கூறி ரகளையில் ஈடுபட்ட மணப்பெண், அதிகாலையிலேயே புகுந்த வீட்டிலிருந்து எஸ்கேப் ஆகி பெற்றோர் வீட்டுக்கும், அங்கிருந்து நேராகத் தன் காதலன் வீட்டுக்கும் ஓடியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், கணவர் மற்றும் காதலன் குடும்பத்தினர் முன்னிலையில் கிராமத் தலைவர் பஞ்சாயத்தைக் கூட்டியுள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு வரை கிட்டத்தட்ட 12 மணி நேரம் விடிய விடிய நீடித்த இந்த மெகா பஞ்சாயத்தின் இறுதியில், நள்ளிரவிலேயே கணவன்-மனைவி இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது.

அதைவிடக் கூத்தாக, அடுத்த சில நிமிடங்களிலேயே காஜியை அவசரமாக வரவழைத்து, காதலனுடன் அந்தப் பெண்ணுக்கு நள்ளிரவில் மறுமணம் செய்து அனுப்பி வைத்த விசித்திரச் சம்பவம் தற்போது நாடு முழுவதும் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.