திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டு, தனது 13 வயது மகளிடமே பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தந்தைக்கு, நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் மாரியம்மாள் தலைமையிலான போலீசார் குற்றவாளியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் சிறப்பாகப் பணியாற்றி தண்டனை பெற்றுத்தந்த ஏ.டி.எஸ்.பி. சண்முகம், டி.எஸ்.பி. ரகுபதிராஜா மற்றும் இன்ஸ்பெக்டர் மாரியம்மாள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளை மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் நேரில் பாராட்டியுள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 9 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதில் ஒருவருக்கு மரண தண்டனையும், இருவருக்குச் சாகும் வரை ஆயுள் தண்டனையும் பெற்றுத் தந்துள்ள நெல்லை போலீசாரின் அதிரடி நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.