கரூர் மாவட்டம் சாலைப்பட்டி கிராமத்தில் தனியாக வாழ்ந்து வந்த தாயார் அம்மாள் என்ற மூதாட்டி, மர்ம நபர்களால் கை, கால்கள் கட்டப்பட்டு கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. நகைக்காக மூதாட்டியின் உயிரைப் பறித்த இந்தச் சம்பவத்தைக் கண்டித்துப் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “நகைக்காக ஒரு மூதாட்டியைக் கூட இரக்கமின்றி படுகொலை செய்யும் அளவுக்குத் தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்திருப்பது கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை நிலவி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், “மழை விட்டும் தூவானம் விடாத கதையாக திமுக ஆட்சியை அகற்றுவதற்கான தீர்ப்பு எழுதப்பட்ட பிறகும், கொலை, கொள்ளை போன்ற தீமைகள் தொடர்கின்றன” என்று விமர்சித்துள்ளார்.
சாலைப்பட்டி கொலையாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அன்புமணி, திமுக ஆட்சியின் எஞ்சியிருக்கும் இந்த ஒரு வாரத்திலாவது மக்கள் அச்சமின்றி வாழ அரசு உறுதி செய்ய வேண்டும் எனத் தனது அறிக்கையில் சாடியுள்ளார்.
