தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்து முடிவுகளுக்காகக் காத்திருக்கும் நிலையில், மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் அவரைத் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, குழந்தைகளை வைத்து அவர்களது வீட்டில் உள்ள பெரியவர்களிடம் தமக்கு வாக்களிக்கச் சொல்லக் கேட்டுக் கொண்டது மிகப்பெரிய தவறு எனச் சாடியுள்ளார். இது போன்ற செயல்கள் குழந்தைகளைத் தவறான முறையில் அரசியலுக்குப் பயன்படுத்துவது போன்றது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் ஒரு படி மேலே சென்ற கோபால், “ப்ளூவேல் கேம்” (Blue Whale Game) மூலம் பல இளைஞர்களும் குழந்தைகளும் தற்கொலைக்குத் தூண்டப்பட்டதை நினைவூட்டி, விஜய்யின் இந்த அணுகுமுறையும் அதற்கு எந்த விதத்திலும் குறைவானது அல்ல என மிகக் கடுமையான வார்த்தைகளால் தாக்கியுள்ளார். விஜய்யை ஒரு ஆபத்தான விளையாட்டாகச் சித்தரிக்கும் கோபாலின் இந்தப் பேச்சு, அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இதற்கு தவெக தொண்டர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தேர்தல் முடிவுகள் வரும் நேரத்தில் இந்த விமர்சனம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
