தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்து மே 4-ம் தேதி முடிவுகளுக்காகக் காத்திருக்கிறார். ஆனால், தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னரே, விஜய் தமிழக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து கோப்புகளைச் சரிபார்ப்பது போன்ற புகைப்படங்களை வைத்து காலண்டர்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யின் தீவிர ரசிகர்கள் அவர் மீது வைத்துள்ள அளவுகடந்த அன்பைப் பயன்படுத்தி, தனிநபர்கள் சிலர் அவரை ஒரு வியாபாரப் பொருளாக மாற்றி சக்கை லாபம் பார்த்து வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. ​ஏற்கனவே ‘தவெக காம்போ செட்’ என்ற பெயரில் விஜய்யின் பிரச்சார உடைகள், கொடி மற்றும் விசில் சின்னம் ஆகியவை சமூக வலைதளங்களில் அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகின்றன.

தற்போது இதன் அடுத்த கட்டமாக, ஏஐ (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ‘முதலமைச்சர் விஜய்’ காலண்டர்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் மூலம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இது போன்ற நடவடிக்கைகளை கட்சித் தலைமையோ அல்லது விஜய்யோ தலையிட்டு நிறுத்த வேண்டும் என்றும், சாதாரணத் தொண்டர்களின் உணர்வுகளை வைத்து லாபம் பார்ப்பதைத் தடுக்க வேண்டும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.