இந்தியா முழுவதும் கோடை வெயில் சதத்தைத் தாண்டிப் பதிவாகி வரும் நிலையில், மனிதர்களுக்கே அது தாங்க முடியாத ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில், வாயில்லா ஜீவன்களான தெருநாய்களின் நிலை இன்னும் பரிதாபத்திற்குரியது. இதைக் கண்டு மனம் இரங்கிய இந்தியக் கடைக்காரர் ஒருவர், தனது கடையின் கதவுகளைத் திறந்து வைத்து, சாலையில் தவித்துக் கொண்டிருந்த தெருநாய்களை உள்ளே அனுமதித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், சுமார் 9 முதல் 10 நாய்கள் அந்தக் கடையின் தரைப்பகுதியிலும், சில நாய்கள் மேசையின் மீதும் மிகவும் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கின்றன. எவ்விதக் கூச்சலோ அல்லது தொந்தரவோ இல்லாமல், அவை ஏதோ தனது சொந்த வீட்டில் இருப்பதைப் போல அமைதியாக ஓய்வெடுக்கின்றன.

“இந்தியா முழுவதும் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், இந்தக் கடைக்காரரின் செயல் மனிதநேயத்தின் உச்சம்” எனப் பலரும் புகழ்ந்து வருகின்றனர். “இதுபோன்ற நல்ல மனிதர்களால்தான் உலகம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது” என்று பதிவிட்டுள்ள நெட்டிசன்கள், அவருக்குத் தங்களது வாழ்த்துக்களைக் குவித்து வருகின்றனர்.