கர்நாடக மாநிலம் புட்டூர் பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ஒருவரின் மகன் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டு அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சக மாணவியைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி பலமுறை பலாத்காரம் செய்ததாக அந்த 22 வயது இளைஞர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் கர்ப்பமடைந்து தற்போது 10 மாதக் குழந்தையுடன் நீதிக்காகப் போராடி வருகிறார். இந்த விவகாரத்தில் தன் மீதான எப்.ஐ.ஆர்-ஐ (FIR) ரத்து செய்யக் கோரி அந்த இளைஞர் கர்நாடக உயர்நீதிமன்றத்தை அணுகினார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அந்தப் புகாருக்கு இடைக்காலத் தடை விதித்தது. ஆனால், அதே சமயம் ஒரு முக்கியமான நிபந்தனையையும் விதித்துள்ளது.
அதன்படி, பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கும் அவரது 10 மாதக் குழந்தைக்கும் பராமரிப்புச் செலவாக மாதந்தோறும் ரூ.75,000 அந்த இளைஞர் வழங்க வேண்டும் என அதிரடி உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு முடியும் வரை இந்தத் தொகையைத் தொடர்ந்து செலுத்த வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது, அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
