மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டம் வரூத் பகுதியில், 16 வயது சிறுமி ஒருவருக்கு அவரது சொந்தப் பெற்றோரே மொட்டையடித்து வீட்டுச்சிறையில் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு இளைஞன் தனது மகளைத் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதாகச் சந்தேகித்த பெற்றோர், அந்த இளைஞன் மீது புகார் அளிக்கச் சிறுமியை வற்புறுத்தியுள்ளனர்.
ஆனால், சிறுமி அதற்கு மறுப்புத் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த பெற்றோர், “யாரும் உன்னைப் பார்க்கக் கூடாது” எனக் கூறி வலுக்கட்டாயமாகச் சிறுமியின் முடியை வெட்டி, அவரை வீட்டிற்குள்ளேயே பூட்டி வைத்துள்ளனர். இந்தக் கொடுமையான சித்திரவதையிலிருந்து தப்பிய அந்தச் சிறுமி, துணிச்சலாக வரூத் காவல் நிலையத்திற்குச் சென்று தனது பெற்றோருக்கு எதிராகவே புகார் அளித்துள்ளார்.
தனது விருப்பத்திற்கு மாறாகத் தனக்கு வழங்கப்பட்ட இந்தத் தண்டனை கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சிறுமியின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இது மைனர் பெண்ணின் உரிமைகள் மற்றும் கண்ணியம் சார்ந்த விஷயம் என்பதால் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெற்றோரின் இந்த விசித்திரமான மற்றும் கொடூரமான செயல் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
