மகாராஷ்டிரா மாநிலம் ஜுன்னர் தாலுகாவில், மூடநம்பிக்கையைப் பயன்படுத்தி ஒரு சிறுமியின் வாழ்க்கையைச் சிதைத்த இரண்டு போலி சாமியார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பங்கஜ் தேவராம் கோலப் மற்றும் நானா பர்டே ஆகிய இருவரும், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய்க்கு இருக்கும் நீண்டகால நோயைத் தங்களின் ‘தெய்வீக சக்தியால்’ குணப்படுத்தி விடுவதாகக் கூறி ஆசை காட்டியுள்ளனர்.

கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை, தாய்க்கு மந்திரித்த விபூதி தருவதாகக் கூறி, சிறுமியிடம் நெருங்கிப் பழகிய பங்கஜ் கோலப், அவரைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை காட்டித் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அந்தச் சிறுமி கர்ப்பமான நிலையில், திருமணம் செய்ய மறுத்ததோடு அவருக்குக் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சிறுமி, ஆளேபாட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, போலி சாமியார்கள் மீது போக்ஸோ மற்றும் மாந்திரீகத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.