கத்தாரில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றிற்குத் தேனிலவு சென்ற பிரிட்டிஷ் தம்பதியினர், எதிர்பாராத விதமாகப் பெரும் சட்டச் சிக்கலில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹோட்டல் நீச்சல் குளத்தின் அருகே தனியாக இருந்த மனைவியிடம் இரண்டு மர்ம நபர்கள் ஆபாசமாகப் பேசித் துன்புறுத்தியுள்ளனர்.
இது குறித்து ஹோட்டல் நிர்வாகத்திடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், மாறாகத் தங்களைப் பார்த்து ஊழியர்கள் கேலி செய்ததாகவும் அந்தத் தம்பதியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனால் அதிருப்தியடைந்த கணவர் கிரேக் பாரட், அந்த ஹோட்டல் பெண்களுக்குப் பாதுகாப்பற்றது என இணையத்தில் விமர்சனம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த ஒரு விமர்சனமே அவர்களுக்குப் பெரிய வினையாக முடிந்தது.
கத்தாரின் இணையக் குற்றச் சட்டத்தின் கீழ் கிரேக் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார். அவருக்குப் பெரும் தொகை அபராதமாக விதிக்கப்பட்டதோடு, சில நாட்கள் சிறையிலும் அடைக்கப்பட்டு, இறுதியில் அவர் கத்தாரிலிருந்து நாடு கடத்தப்பட்டார்.
ஒரு சாதாரண ஆன்லைன் விமர்சனத்திற்காகத் தனது கணவர் சிறை தண்டனை அனுபவித்து, நாடு கடத்தப்பட்ட விதம் தங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக அந்தப் பெண் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் கருத்துச் சுதந்திரம் குறித்த விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
