குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த சிவம் மௌரியா என்ற இளைஞர், தனது ‘கிரியேட்டிவ் சயின்ஸ்’ குழுவினருடன் இணைந்து, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் ஒரு விசித்திரமான சைக்கிளை உருவாக்கியுள்ளார். இந்த சைக்கிளின் சிறப்பு என்னவென்றால், இதில் மனிதர்கள் யாரும் உட்கார வேண்டிய அவசியமில்லை.
தானாகவே பேலன்ஸ் செய்துகொண்டு ஓடும் இந்த சைக்கிளில், மனித கால்களைப் போன்ற ஒரு அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. சைக்கிள் ஓடும்போது அந்தக் கால்கள் தானாகவே பெடல் செய்வதைப் பார்க்கும்போது, ஏதோ உருவம் தெரியாத ஆவி சைக்கிள் ஓட்டுவது போன்ற உணர்வைத் தருகிறது. இதனாலேயே மக்கள் இதனை ‘கோஸ்ட் சைக்கிள்’ என்று அழைக்கின்றனர்.
View this post on Instagram
சுமார் 35,000 ரூபாய் செலவில், 3 மாத கால கடுமையான உழைப்பில் இந்த சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ஒரு மொபைல் செயலி மூலமாகவோ, ரிமோட் மூலமாகவோ அல்லது குறிப்பிட்ட பாதையை மேப்பிங் செய்வதன் மூலமாகவோ தானியங்கி முறையில் இயக்க முடியும். சாலையில் வரும் தடைகளைக் கண்டறிந்து விலகிச் செல்லும் சென்சார்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.
“இந்தத் தொழில்நுட்பம் வருங்காலத்தில் ஆளில்லாத டெலிவரி சேவைகளுக்கும், பாதுகாப்பு ரோந்துப் பணிகளுக்கும் பெரிதும் உதவும்” என சிவம் மௌரியா நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஏற்கனவே டிரைவர் இல்லாத ‘கருடா ஏஐ பைக்’ உருவாக்கி சாதனை படைத்த சிவத்திற்கு, இணையதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
