மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இசைக்கல்லூரி மாணவி ரேணுகா (25), தனது தனிப்பட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காக இன்ஸ்டாகிராம் வழியாக ஒரு சாமியாரைத் தொடர்புகொண்டுள்ளார். அந்தப் போலி சாமியார் பிரச்சனையைத் தீர்த்து வைப்பதாகக் கூறி, ஆன்லைன் மூலமாகப் பல்வேறு தவணைகளில் சுமார் ரூ.74,400 பணத்தைப் பறித்துள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்ட பிறகும் விடாமல், “மேலும் பணம் தராவிட்டால் உனக்கும் உன் பெற்றோருக்கும் தீங்கு நேரிடும்” என்று அந்தச் சாமியார் தொடர்ந்து மிரட்டியுள்ளார்.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ரேணுகா, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், அடையாளம் தெரியாத அந்தப் போலி சாமியார் மீது தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
