மேற்குவங்கத்தில் நேற்று நடைபெற்ற பாஜக ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்றபோது, எதிர்பாராத விதமாகச் செல்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட நேரமாகப் பாஜக தொண்டர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது. அப்போது, பொறுமை இழந்த பெண் தொண்டர் ஒருவர், அமித்ஷாவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “தயவுசெய்து சீக்கிரம் வாருங்கள்” எனப் பதிவிட்டிருந்தார்.

​தொண்டரின் இந்த கமெண்ட்டை தற்செயலாகக் கவனித்த அமித்ஷா, அதற்கு உடனடியாகப் பதிலளித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். “தாமதத்திற்கு மன்னிக்கவும், அடுத்த 10 நிமிடங்களில் நான் அங்கு இருப்பேன்” என அவர் ரிப்ளை செய்திருந்தார். சொன்னபடியே அடுத்த சில நிமிடங்களில் ரோடு ஷோவில் அவர் ஆஜராக, அமைச்சரின் இந்த எளிமையான செயலும், இன்ஸ்டாகிராம் பதிலடியும் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.